
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த காலம் முதல் இன்றைய நாள் வரை இறை நம்பிக்கை தீய சக்திகள் மீதான நம்பிக்கை ஜாதகம் சம்பிராதயம் என்ற விசயங்களில் உள்ள நம்பிக்கை விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. இவை உண்டா இல்லையா என்ற வினாவிற்கு உறுதியாக விடையளிக்க யாராலும் முடியாத ஒரு நிலையே நீடித்து வருகிறது. உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் கோரிக்கைகளை இறைவனிடம் பக்தி பஜனைகள் மூலம் வெளிக்காட்டி அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்கின்றனர். இப்பழக்கம் மூலம் பொதுமக்களில் சில நபர்கள் வருடத்தில் சில மாதங்களில் இறைவனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து அவரவர் விரும்பும் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு உடல் மற்றும் உள்ளம் சார்ந்து ஒரு புதிய உந்து சக்தியை வழங்குவதாக உணர்கின்றனர். ஆனால் ஒரு தரப்பினரோ இறைவன் என்ற ஒரு விசயமே பொய்யானது. இயற்கை ஒன்றே இறைவன் எனக்கூறுபவர்களும் அதே போல் இவையெல்லாம் பொய், மனித சக்தியே உயர்ந்தது என நாத்திகம் பேசுபவர்களும் உள்ளனர்.
இவையெல்லாம் ஒரு பக்கம் வளர்ந்து வந்தாலும் அறிவியலும் அபார வளர்ச்சியை கண்டுள்ளது. ஆம் இன்றைய நாளில் ஏ.ஐ எனப்படும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிசன்ஸ் என்ற செயற்கை அறிவுநுட்பம் கொடிகட்டி பறந்து பல அபார சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் சில கண்ணுக்கத்தெரியாத விசயங்களால் தீமைகள் நடப்பதாக சென்னையில் ஒரு சமூகத்தினர் தொடுத்த புகாரின் அடிப்படையில் சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து இப்பதிவில் காண உள்ளோம். வழக்குத்தொடர்ந்தவர் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்குத்தொடரப்பட்ட இடம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் சாரம் மேற்படி நபர் தனது வீட்டில் சில சாமி சிலைகளை வைத்து அப்பகுதி மக்களை அழைத்து பிரார்த்தனை வழிபாடு செய்து வந்ததாகவும், ஆனால் அவ்வகை வழிபாட்டிற்குப் பின் அப்பகுதியில் இயற்கைக்கு மாறான வகையில் பல துர்மரணங்கள் நிகழ்ந்ததாகவும் எனவே அப்பிரார்த்தனைகளை நிறுத்தும் வகையில் அங்கு அவர் வீட்டில் உள்ள சாமி சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அங்கிருந்த சாமி சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும், அச்செயல்பாட்டிற்கு எதிராக மேற்படி நபரால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அச்சிலைகள் அவரிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தும் அவை இன்னும் ஒப்படைக்கப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்தறிந்த மாண்புமிகு நீதியரசர் அவர்கள் சாமிசிலைகளை அப்புறப்படுத்தியது மனுதாரர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் பொதுமக்களுக்கு இடையூறான வகையில் ஏதும் செயல்பட்டிருந்தால் அது ஏற்கத்தக்கது. நிலை அவ்வாறில்லாமல் தனது வீட்டில் அமைதியான முறையில் அக்கம்பக்கத்தினரை அழைத்து வழிபாடு நடத்துதல் என்பது ஏற்கத்தகுந்ததே. இந்நிலையில் அதிகாரிகள், அப்பகுதியில் அதிகமாக வசிக்கும் ஒரு சமூகத்தினர் மூடநம்பிக்கைகளை காரணம் காட்டி இதற்கு எதிராக கொடுத்த புகாரை ஏற்று நடவடிக்கை எடுத்து சாமி சிலைகளை அப்புறப்படுத்தியது ஏற்கத்தகாதது என்றும் இத்தகைய வகையில் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக கொடுக்கப்பட்ட உத்தரவிற்கு இன்னும் செவி சாய்க்காமல் அரசு அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் எனவே அவரது சாமி சிலைகளை அவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அரசு அதிகாரிகள் இது போன்ற மூடநம்பிக்கைகளை காரணம் காட்டி நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கதல்ல எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டம் அறிவோம்!
சிறப்புடன் வாழ்வோம்!
M.sudharani
Advocate
Madurai Bench Madras High Court