
சென்னை மெட்ரோ ரயில்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப் பட்டுள்ள இருக்கைகளை மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதைத் தடுக்கவும். உரியவர்களுக்கு அந்த இடங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோவின் ஒரு பெட்டி யிலுள்ள 50 இருக்கைகளில் 14 இடங்கள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டினர். எனவே. அதிகாரிகள் அவ்வப்போது ரயில்களில் திடீர் ஆய்வு நடத்தி, விதிகளை மீறி இருக்கைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இவர்களுக்கெனத் தனிப் பெட்டிகளை ஒதுக்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மேலும், இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அடுத்த 30 நாட்களுக்குள் மெட்ரோ ரயில் நிர்வாகம் வகுக்க வேண்டும் என நீதிமன்றம் தனது அதிரடித் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளது.