சட்டம் முரசு வணிக நோக்கில் தயாரிக்கப்படும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த வளர்ந்த நடிகர்களின் திரைப்படங்களும் வழக்காடுமன்றத்தீர்ப்பும் அனைவருக்கும் வணக்கம், சமுதாயத்தில் பெரும் பாதிப்பை நிகழ்த்திவிடும் சக்திபொதுவாக திரைப்படங்களுக்கும் உண்டு என்ற கூற்று அனைவரும் ஏற்கத்தகுந்த ஒன்றே. இத்தகைய நிலையில் இன்றைய சமுதாயம் மொபைல் போன்களின் பக்கம் பெரிதும் சாய்ந்துவிட்ட நிலையில், அனைத்துத்தகவல்களையும் மிகவும் துரிதமாகவும் எளிதாகவும் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வசதி மிகுந்துவிட்டது. இன்றைய நாட்களில் தியேட்டர்களில் வெளிவரும் திரைப்படங்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துவிட்டது எனினும் சில முன்னனி கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஆண்டுக்கு ஒன்றாவது வெளிவந்து சமுதாயத்தில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் ஒன்றாக மாறிவிடுகிறது. அறிவியல் சார்ந்த அனைத்துத் தொழில்நுட்பங்களும் வளர்ந்துவிட்ட நிலையில் திரைப்படங்களில் அரங்கேற்றப்படும் வன்முறைக்காட்சிகளும் வரையறைக்குட்படாத வகையில் மிகுந்தே காணப்படுகிறது. சாதாரண மனிதனால் சீரணித்துக்கொள்ள முடியாத அளவிற்கு அரங்கில் அரங்கேற்றப்படும் அசாதாரமண கொலைகள் காண்போரை முகம் சுழிக்கச்செய்கிறது. இத்தகைய படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் வெளியில் தங்களை சமுதாய அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்ககொண்டாலும், வருமானத்திற்காக எத்தகைய வன்முறைக்காட்சிகளையும் திரையில்தோன்றச் செய்ய தயங்குவதில்லை. இத்தகைய வகையில் 18 வயதிற்குட்பட்டவர்களின் மனநலத்தை பாதிக்கும் வகையில் உள்ள திரைப்படங்களுக்கு திரைப்பட தணிக்கைக்குழு ஏ சர்ட்டிபிகேட் வழங்குவது வழக்கம். இவ்வகையில் தற்சமயம் திரையில் தோன்றிய ஒரு திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட ஏ சர்ட்டிபிகேட்டை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குப்பற்றி இப்பதிவில் காண உள்ளோம். வழக்கின் சாரம் தற்சமயம் வெளிவந்த கூலி திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட ஏ சர்ட்டிபிகேட்டுக்கு மாற்றாக யுஏ சர்ட்டிபிகேட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. இத்திரைப்படத்திற்கு வன்முறைக்காட்சிகள் மிகுந்திருப்பதால் ஏ சர்ட்டிபிகேட் வழங்கபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் திரைப்படக்குழுவினர் அப்படத்தில் உள்ள பெரும்பாலான வன்முறைக்காட்சிகள் சமுதாய நலன் கருதி நீக்கப்பட்டுவிட்டதாகவும் எனவே தற்சமயம் அதற்கு யு ஏ சான்றிதழ் வழங்கலாம் எனவும் கோரிக்கைவிடுக்கப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்தறிந்த மாண்புமிகு நீதியரசர் அவர்கள் திரைப்படக்குழுவினர் திரைப்படத் தணிக்கைக்குழுவினர் வழங்கிய ஏ சர்ட்டிபிகேட்டுடன் திரைப்படத்தை திரையிட்டுவிட்டு இவ்வளவுகாலம் கழித்து ஏ சர்ட்டிபிகேட்டை மாற்றக் கோரிக்கை வைப்பது ஏற்கத்தகுந்தல்ல என்றவாறு கூறி மறுப்புத்தெரிவிக்கப்பட்டுவிட்டது. வருமானத்துடன் சமுதாய அக்கறையையும் சற்றே எண்ணிப்பார்ப்பவர்களே சமுதாய நலன் விரும்பிகள் என்றால் மிகையாகுமோ? சமுதாய அக்கறை கொள்வோம் சலனமற்ற வாழ்வு வாழ்ந்திடுவோம். சட்டம் அறிவோம்! சிறப்புடன் வாழ்வோம்! M.sudharani Advocate Madurai Bench Madras High Court