‘காந்தி டாக்ஸ் நோட்டிலும் ரூ. 2000 நோட்டிலும் சிரித்தபடி காந்தி பார்த்துக்கொண்டிருக்கிறார். இறுதியில், அவரவர் பணப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்ததா? என்பதே கதையின் ஒன்லைன். மனிதன் பேசாவிட்டால் என்ன? எப்போதும் பணம்தானே இங்கே பேசிக்கொண்டிருக்கிறது ? ஒவ்வொரு கணமும் பணம் இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கை நகரும் என்பதை வசனங்களே இல்லாமல் காந்தி டாக்ஸ் பேசுகிறது.
ஒருவேளை உணவிலிருந்து மரணம் வரை நம்முடன் காந்தி இருக்க வேண்டிய தேவை உள்ளது. பணத்தாளில் காந்தி எவ்வளவு அதிகமாக சிரிக்கிறாரா நாமும் நிம்மதியாக இருக்கலாம். நிம்மதி பணத்தால் மட்டுமே வந்துவிடுமா என்ன? நம்முடைய ஆன்மாவை அடகுவைத்து பணத்தைத் துரத்தும் நிலைக்கு லஞ் சமும் ஊழலும் இங்கும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ‘நீயே மாற்றமாக இரு’ என காந்தி சொன்னதெல்லாம் யாருக்கு நினைவில் இருக்கப் போகிறது?
பணம் இருப்பவனும் இல்லாதவனும் அரசு அதிகாரங்களுக்கு முன் ஒன்றுதான் என்கிற நிலையைக் கதாபாத்திரங்களின் ஊடாக இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் உணர்த்தியிருக்கிறார். உடல்நலம் சரியில்லாத அம்மாவைச் சுமக்க வேண்டிய மகனாகவும் காதலியைக் கரம்பிடிக்க
காத்திருக்கும் காதலனாகவும் விஜய் சேதுபதியிடமிருந்து வழக்கம்போல இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது. மெளனமும் இயலாமையும் கையைப்பிசையும் இடங்களில் தன் முகபாவனைகளால் வறுமையின் கொடுமைகளை உணர வைக்கிறார்.
இன்னொரு புறம், மிகப்பெரும் பணக்காரராக இருந்து எல்லாவற்றையும் இழக்கும் கையறுநிலையுடன் பிரச்னை யிலிருந்து வெளிவரப் போராடும் நபராக அரவிந்த் சாமியும் கவனம் ஈர்க்கிறார்.
நடிகை அதிதி ராவ் உணர்வுப்பூர்வமான விஷயங்களை விழியசைகளிலேயே கடத்துகிறார். தன் தாய் அவரைக் கட்டியணைக்கும்போது அதிதியிடமிருந்து உணர்ச்சிமிகுதியில் அபாரமான முகபாவனை வெளிப்படுகிறது. திறமையான நடிகை.
வசனங்கள் இல்லை என்றாலும் பெரும்பாலான காட்சிகள் அடுத்தது என்ன என்கிற ஊகத்தையும் தாண்டி நம்மை சினிமா என்னும் அனுபவத்திற்கு முன் காத்திருக்க வைக்கின்றன. ஆனாலும், மனிதன் பேசாவிட்டாலும் பணம்தான் இங்கு பேசும் என்பதைச் சொல்ல எதற்கு இத்தனை பெரிய நடிகர்கள் என நினைக்க வைக்கும் அளவிற்கு திரைக்கதை பலவீனத்துடனே இருக்கிறது.
சஸ்பென்ஸ் திரில்லராக உருவானாலும் சில காட்சிகள் அயர்ச்சியைத் தருகின்றன. நீதிமன்ற காட்சியில் வாட்ஸப் வாயிலாக நீதிபதி லஞ்சம் வாங்க ஒப்புக்கொள்ள வைத்த காட்சி போன்று இன்னும் சில காட்சிகளை எழுதியிருந்தால் நிறைய இடங்களில் சிரித்து இன்றைய ரீல்ஸ் காலத்திலும் நல்ல கதைக்கு வசனங்கள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை இதனால், சுவரஸ்யமான படமாக காந்தி டாக்ஸ் வரவில்லை. நுட்பமாக பார்ப்பவர்களுக்கான படம்.