RNI.No. TNTAM / 2023 / 88613

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி : உரிமைக் குரல்

“இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்” இது வெறும் அரசியல் சாசன வரிகள் அல்ல; கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடையாளம். இந்த அடையாளத்தைச் சிதைக்காமல் காக்கக்கூடிய ஒரே மந்திரச் சொல்: மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. பேரறிஞர் அண்ணா அவர்கள் அரை நூற்றாண்டுக்கு முன்பே விதைத்த இந்தச் சிந்தனை, இன்று முன்பை விட அதிகத் தேவையுள்ள ஒன்றாக மாறியிருக்கிறது. ஒரு நாட்டின் தலைநகரில் அமர்ந்துகொண்டு, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு கிராமத்தின் கல்வி, உணவு மற்றும் கலாச்சாரத்தைத் தீர்மானிப்பது உண்மையான ஜனநாயகம் ஆகாது. அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே இந்த முழக்கத்தின் அடிப்படை நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, மாநில சுயாட்சிக்கான புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில முக்கியக் கோரிக்கைகள் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை உரக்கச் சொல்கின்றன: கல்வி என்பது மாநில உரிமை: ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவமான கல்விமுறை உண்டு. ‘நீட்’ போன்ற பொதுவான தேர்வுகள் கிராமப்புற மாணவர்களின் கனவைச் சிதைக்கின்றன. எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதே சமூக நீதிக்கு அழகாகும். நிதிச் சுதந்திரம்: மாநிலங்கள் உழைத்து ஈட்டும் வருவாயில் பெரும்பகுதியை மத்திய அரசு எடுத்துக்கொண்டு, நிதி ஒதுக்கீடு செய்யும் முறையை மாற்ற வேண்டும். ஜி.எஸ்.டி வரி பகிர்வில் மாநிலங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். பன்முகத்தன்மையே இந்தியா வின் பலம்: இந்தியா என்பது பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இணைந்த ஒரு கதம்பம். மாநிலங்கள் வலிமை பெற்றால் மட்டுமே இந்தியா ஒரு வலிமையான நாடாக உலக அரங்கில் நிமிர முடியும். தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநிலங்களே ஒரு ஆரோக்கியமான ஒன்றியத்திற்கு அடித்தளம். மத்திய அரசு என்பது மாநிலங்களுக்கு எஜமானன் அல்ல. அது ஒரு ஒருங்கிணைப் பாளர் மட்டுமே. மாநிலங்களின் உரிமைகளை மதித்து, அவற்றுக்கு உரிய சுயாட்சியை வழங்குவதே உண்மையான கூட்டாட்சி. தமிழகம் எடுத்து வைத்துள்ள இந்த அடிவைப்பு. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மாநில உரிமை களை மீட்டெடுப்பதற்கான ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *