
நடிகர் ரஜினிகாந்த், கோவாவில் நடைபெற்ற 56வது சர்வதேசத் திரைப்பட விழாவில், திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய 50 ஆண்டுகால பங்களிப்பிற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். நவம்பர் 20 அன்று துவங்கி 28 வரை நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அரசால் விருது வழங்கப்பட்ட பின்னர் அவர் உரையாற்றினார். அப்போது, தனது சினிமா பயணம் மிக வேகமாக ஓடிவிட்டதாகவும், சினிமாவையும் நடிப்பையும் தான் என்றும் விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், “இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகராகவே பிறக்க விரும்புகிறேன்” என்று தனது விருப்பத்தை ஆழமாக வெளிப்படுத்தினார். தனக்கு விருது வழங்கிய கோவா விழா மற்றும் மத்திய அரசுக்கும், தன்னை வாழவைத்த தமிழக மக்கள், திரைத் துறையினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.