
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) அண்மையில் நிறைவடைந்தன. இதனை அடுத்து வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். வாக்காளர்கள் தங்கள் பெயர் வரைவுப் பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்களில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் eci.gov.in அல்லது தமிழ்நாடு தேர்தல் அலுவலகத்தின் tnelections.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று, உங்களது பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி தேடலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து உள்ளூர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் (BLO) கிடைக்கும். பொது மக்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்குச் சென்று தங்கள் பெயரை சரிபார்க்கலாம்.
இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டறிய முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு செய்த வாக்காளர்களின் விவரங்கள் இந்த வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வெளியிடப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். அதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள், தங்கள் பெயரை சேர்க்க, படிவம் 6ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இந்த ஒரு மாத காலம் வாக்காளர்கள் தங்களது தகவல்களைச் சரிபார்த்து, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது திருத்தங்கள் தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 14ந் தேதி வெளியிடப்படும்.