பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெறவுள்ள பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) விடை கொடுத்துவிட்டு, மீண்டும் பழைய வாக்குச்சீட்டு (Ballot Paper) முறையை அமல்படுத்த மாநில அமைச்சரவை அதிரடி முடிவெடுத்துள்ளது. தேர்தல் நடைமுறையில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும். பொதுமக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைப் போக்கவும் இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ‘கர்நாடக கிராம ஸ்வராஜ் மற்றும் பஞ்சாயத் ராஜ் சட்டத்தில்’ உரிய மாற்றங்களைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு, தேசிய அளவில் மின்னணு இயந்திரங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது.