கூடுவாஞ்சேரி பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மத்திய அரசின் ‘அமிர்த் பாரத்’ திட்டத்தின்கீழ் நவீனமயமாக்கப்படுகின்றது. சுமார் 14.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள், சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக விசாலமான நுழைவு வாயில், வாகன நிறுத்தங்கள், மேம்படுத்தப்பட்ட நடைமேடைகள் மற்றும் புதிய லிப்ட் வசதிகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நிலையத்தின் முகப்புப் பகுதியை நவீனக் கட்டடக்கலை நுணுக்கங்களுடன் பொலிவுபடுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.