கோலாலம்பூர்: மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ஆற்றிய உரை ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது. “உலகிற்கு இந்தியா அளித்த ஆகச்சிறந்த பரிசு தமிழ் மொழி” என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தோழமையுடன் வரவேற்ற மலேசியப் பிரதமர் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று கோலாலம்பூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அரசு சார்பில் உற்சாகமான சிவப்பு கம்பள’ வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபுப்படி மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேரில் வந்து மோடியை ஆரத்தழுவி வரவேற்றார். இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவின் புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.
அந்நாட்டின் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளை இரு நாட்டுப் பிரதமர்களும் இணைந்து ரசித்தனர். கலைஞர்களின் திறமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, தனது எக்ஸ் (X) தளத்தில், “எனது நண்பர் அளித்த அன்பான வரவேற்பால் நெகிழ்ந்து போனேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழுக்கு மகுடம் சூட்டிய பிரதமர் கோலாலம்பூரில் திரண்டிருந்த
ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி யினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ் மொழியின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்:
- உலகளாவிய தமிழ்: “இந்தியாவை உலகுடன் இணைக்கும் உயிர்நாடியாகத் தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் இலக்கியங்கள் காலத்தால் அழியாதவை. தமிழ்க் கலாசாரம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கியதல்ல, அது உலகளாவியது” என முழங்கினார்.
திருவள்ளுவர் கலாசார மையம்: தமிழின் புகழை மலேசிய மண்ணில் நிலைநாட்டும் வகையில், அங்கு விரைவில் ‘திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். - நிர்வாகத்தில் தமிழர்கள்: இந்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழர்களாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், எனது அரசாங்கத்தில் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது என்றார். புதிய உச்சத்தில் இருதரப்பு உறவு மலேசியாவில் சுமார் 29 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இது உலகின் மூன்றாவது பெரிய இந்திய சமூகமாகும் என்றார்.
- கலாசாரப் பாலம்: “இந்திய இசையும், திரைப்படங்களும் மலேசியாவில் மிகவும் பிரபலம். பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிகச் சிறப்பாகப் பாடும் திறன் கொண்டவர். அவர் பழைய ஹிந்தி பாடல்களைப் பாடுவதோடு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்களை விரும்பி ரசிப்பது எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது” என்றார்.
- பொருளாதார இலக்கு: இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதையும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருப்பதையும் அவர் விளக்கினார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். ஆசியான் மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு மலேசியா ஒரு முக்கியப் பங்காளியாக விளங்கும் என பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.
தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேசியாவைத் தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கு, மலேசியத் தமிழர்கள் உற்சாகமான வழியனுப்பு விழாவை நடத்தினர்.