தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 9 காவலர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது. இந்த இரட்டைக்கொலை வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து கடந்த 6-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள மேல்முறையீடு செய்வது அவர்களின் சட்டப்பூர்வ உரிமை” எனக் கூறி, அதற்குத் தேவையான ஆவணங்களைப் பெற அவர்களுக்கு அவகாசம் வழங்கி வழக்கை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
