RNI.No. TNTAM / 2023 / 88613

செல்போன் செயலி பதிவிறக்கத்தில் இந்தியா தொடர்ந்து முதலிடம்: உலக அளவில் சாதனை

உலக அளவில் செல்போன் செயலிகளை (Mobile Apps) பதிவிறக்கம் செய்வதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 2,550 கோடி செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன; இது அமெரிக்காவின் பதிவிறக்க எண்ணிக்கையை (1,260 கோடி) விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே இந்தியாவில் 620 கோடி செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதன் மூலம் சுமார் 30 கோடி டாலர் வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கேமிங் (Gaming), பொழுதுபோக்கு மற்றும் நிதிச் சேவை தொடர்பான செயலிகளை இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். உலகளவில் பதிவிறக்க எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா இன்னும் பின்தங்கியே உள்ளது. இந்தியாவில் செயலி பயன்பாட்டிற்கான கட்டணங்கள் குறைவாக இருப்பதும், விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருப்பதுமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வரும் காலங்களில் இந்திய செயலி சந்தையின் வருவாய் 125 கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *